Pages

காலமும் உணவும்

காலமும் உணவும்
உணவை எந்த முறையில் உண்ண வேண்டும். உணவின் அளவு, உணவுண்ணும் நேரம் முதலியவற்றை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர். “உண்பது நாழி, உடுப்பவை இரண்டே“315 என்று பழந்தமிழ் மக்கள் கருதினர்.
“நுதல் வியர்க்கும் படியாக உணவை உண்டனர்“316 என்னும் செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகிறது.
"" விலாப்பக்கம் புடைக்கும் அளவிற்கு உணவுண்டனர்''317
என்பவற்றிலிருந்து உணவை எவ்வாறு உண்டனர் என்பது தெரியவரும். ஆனால், மருத்துவ நோலோர் மேற்கண்ட முறை யிலிருந்து மாறுபட்டிருக்கின்றனர்.
"" இரும்புறு பசியே யாகில்
இதயமே மலர்ந்து தோன்றும்
இரும்புறப் பசித்த ஊணும்
மிகுந்தஇன் பத்தைக் காட்டும்.''318
பசி உண்டான பின்னர் உண்ணும் உணவே உடலுக்கு இன்பத்தைத் தரவல்லதாகும் என்று கண்டனர்.
"" அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.''319
முன்னர் உண்ட உணவு செரிப்புண்டானதை அறிந்தும், பின்னர் மிக்க பசி உண்டான பின்பும், உடலுக்கு எந்தவித ஒவ்வாமையையும் உண்டாக்காத உணவை அறிந்தும் உண்க என்றனர். அதுவே, ‘நெடிதுய்க்குமாறு’ 320 என்றதைப் போல, நீண்ட நாள் வாழ வழி வகுக்கும் என்று வாகட மறையோர் வகுத்த முறையாம்.
அதே போல், உணவை எத்தனை பொழுது உண்பது என்பதும் கேள்விக்குரியது. சராசரியாக நாளொன்றிற்கு மூன்று வேளையை விடவும் அதிகமாக உண்ணுபவர் உண்டு. என்ற போதிலும் மூன்று வேளை உணவு என்பதே முறையானது என்பது பொதுவான கருத் தாகும். ஆனாலும், மருத்துவ வல்லார் உரைப்பது வேறாக உள்ளது.
"" உண்பதே ஒருபொழு தாகில் உடலுக்கு உறுதி யாகும்
உண்பதே இருபோ தாகில் உயர்பெலம் எழுதாது எய்தும்
உண்பது மூன்று காலம் உண்டிடில் பிணிஉண் டாகும்
உண்பதும் இரண்டு காலம் உரைத்ததாம் உலகத் தோர்க்கே
உரைத்திடும் காலம் ஆறும் உயர்நிலம் ஐந்தும் ஒக்கும்
நெறியுறு காலம் தப்பா நேர்மையாய்ச் சமைத்த அன்னம்
நெறியுற உண்பார்க்கு இல்லை நீள்நிலம் மீதில் நோயே.''321
ஒரு வேளை உணவினால் உடலுக்கு உறுதியும், இருவேளை உண வினால் உடலுக்கு வலுவும் உண்டாகும். மூன்று வேளை உணவு உண்டால் நோயும் உண்டாகும். இது உலகத்தோர்க்கு உரைத்தது. ஆறு காலத் திலும் ஐவகை நிலத்திலும் வாழும் மக்கள் அனைவர்க்கும் இது பொருந்தும்.
இவ்வாறு காலமாறுபாடு இல்லாமல் குறித்த காலத்தில், முறை யாகச் சமைக்கப் பெற்ற உணவை உண்ணுகின்றவர்களுக்கு நோய் என்பதே வராது என்று வகுத்துரைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
காலமும் கற்பமும்
சாகா நிலையை எய்துவதற்காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் மருத்துவ, ஞான நூல்கள் கற்பங்களைக் கூறியுள்ளன. அக்கற்பங்களை உண்பதற்கு நாள்கள் குறிக்கப்படுகின்றன. கற்பங்களைப் பௌர்ணமி நாளிலும், மூன்றாம் பிறை நாளிலும் உண்ண வேண்டும் என்பர்.322
காலமும் யோகமும்
யோக முறைகளைப் பின்பற்றிச் சித்த நிலையைப் பெற முயல் பவர்கள், எந்தெந்தக் காலங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு அரிய முறைகளைக் கூறக் காண்கிறோம்.
யோகிகள் தங்கள் செயல் ஆவணி, மார்கழி, ஐப்பசி, பங்குனி, வைகாசி, ஆடி, தை ஆகிய ஏழு மாதங்களில் தொடங்கினால் குற்ற மில்லை.
மேஷம், மீனம், கன்னி, அவிட்ட நட்சத்திரங்களும்
குரு, மதி, புகர், புந்தி ஆகிய இலக்கினங்களும்
மீனம், வில், துலை, கன்னி ஆகிய இராசிகளும்
பஞ்சமி, சஷ்டி, சத்தமி, தசமி, திருதிகை, சதுர்த்தி
ஆகிய திதிகளும் குருபூசை, சிவபூசை, தீட்ø
ஆகியவற்றுக்கு நல்ல நாள்களாகும் என்பர்.323
காலமும் நோயும்
நோயுற்றது எந்த நாள் என்பதை அறிந்தால், இயல்பாக எந்த நாளில் அந்த நோய் போகும் என்பதை அறிய விண்மீன்களைக் கொண்டும்324 திங்களைக் கொண்டும்325 அறிந்துள்ளனர். விண்மீன், திங்கள் ஆகியவற்றின் கதிர் இயக்கங்கள் மனித நோயின் ஆற்றலைக் குறைக்கவும் கூட்டவும் வல்லவை என்பது இதனால் பெறப்படும். இது, நாளோடும், கோளோடும் நோய்களுக்கும் மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அறிய வழிவகுக்கும் எனலாம்.

0 comments:

Post a Comment

WELCOME